×

அரசு அலுவலகங்களில் லஞ்சம் உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்: மேஜைக்கு அடியில்தான் பத்திரப்பதிவு வேலைகள்: சொத்துகளை குவிக்கும் வருவாய்த் துறை அதிகாரிகள்

* நீதிபதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
* பதிவுத்துறையினர் லஞ்சம் வாங்க பத்திர எழுத்தர்கள் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர்.
* பல துறைகளிலும் இந்த நிலை உள்ளது.
* லஞ்சம் வாங்குவதில் வருவாய் துறையினருக்கும், பதிவுத்துறையினருக்கும் சமபோட்டி உள்ளது.

மதுரை: அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதிகாரிகள் சொத்துகளை குவிக்கின்றனர். பதிவுத்துறையின் பணிகள் பெரும்பாலும் மேஜைக்கு கீழ் நடக்கின்றன என உயர்நீதிமன்ற மதுரை கிளை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழகத்தில் உள்ள அரசுத்துறை அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதில்லை எனவும், மணல் மற்றும் கனிமவள கொள்ளைகளில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பரவலான குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கலாகும்போது, அதிகாரிகள் அதிகளவில் லஞ்சம் பெறுவதாகவும், இதனை தடுத்து நிறுத்திடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை, ‘‘விவசாயிகள் விளைபொருட்களை உரிய நேரத்தில் விற்பனை செய்ய முடியாமல் ரோட்டிலேயே நாட்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். அரசு அதிகாரிகள் ஒரு மூட்டை நெல்லுக்கு ரூ.40 லஞ்சமாக தராத விவசாயியிடம் நெல் கொள்முதல் செய்வதில்லை. இதற்காக பல இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசு அதிகாரிகள் சம்பளத்தை தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்’’ என கூறியிருந்தனர். மேலும் நீதிபதிகள், ‘‘லஞ்ச ஒழிப்புத்துறையினர் இயன்றவரை அனைத்து நெல் கொள்முதல் மையங்களிலும் அவ்வப்போது திடீர் சோதனைகளை மேற்கொள்ளலாம்’’ என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கரூர் மாவட்டம் மண்மங்கலத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர், பட்டா நிலத்தின் சர்வே எண் தொடர்பான பிரச்னையை தீர்க்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: இந்த விவகாரம் தொடர்பாக மண்மங்கலம் தாசில்தார், தாந்தோணி பிடிஓவிடம்அறிக்கை கேட்கப்பட்டது. ஆனால், பிடிஓ எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காதது தெரியவருகிறது. இதுபோன்று இனி வரும் காலங்களில் நடப்பதை தவிர்த்திடும் வகையில் பிடிஓ மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இது தொடர்பாக அவரது பணி பதிவேட்டில் பதிவு செய்யவும் உத்தரவிடப்படுகிறது. வருவாய் துறையில் அதிகளவில் லஞ்சம் உள்ளது. குறிப்பாக, தாசில்தார், சர்வேயர், டிஆர்ஓ மற்றும் ஆர்டிஓ உள்ளிட்டோர் அதிகளவு ஆவணங்கள் தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்றனர். அதிகளவு சொத்துக்களை சேர்க்கின்றனர்.

மேலும், பல மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை ஊழியர்கள் இதுபோன்ற வழிகளை பின்பற்றுகின்றனர். இங்கு பெரும்பாலான நடவடிக்கைகள் மேஜைக்கு கீழே தான் நடக்கின்றன. இதனால், தான் பதிவு தொடர்பான நடவடிக்கைகள் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.  பதிவுத்துறையினர் லஞ்சம் வாங்க பத்திர எழுத்தர்கள் ஏஜென்டுகளாக செயல்படுகின்றனர். இந்த நிலை பல துறைகளிலும் உள்ளது. இவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. வருவாய் துறையினருக்கும், பதிவுத்துறையினருக்கும் சம போட்டி உள்ளது. எனவே, 10.11.2018 முதல் பணியாற்றிய பிடிஓவின் பெயர், அவரது ஆதார் எண், செல்போன் எண் ஆகிய  விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நவ. 5க்கு தள்ளி வைத்தார்.



Tags : High Court ,government offices , High Court strongly condemns bribery in government offices: Deeds under the desk: Revenue officials accumulating assets
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...